வலி



காலை எழுந்திருக்கும் போதே மனது சரியில்லை.
குடித்த தேநீர் சூடில்லை.
பத்திரிகை வரவில்லை
குளிக்கையில் பாதியில் நீரில்லை.
நேரமானதில் காலை உணவில்லை.
அவசரத்தில் கைபேசி எடுக்கவில்லை.
புகுந்து போகவில்லையென ஆட்டோக்காரன் ஏசியது உறைக்கவில்லை.
அலுவலகத்தில் சொன்ன காலை வணக்கத்தில் உற்சாகமில்லை.
வலைத் தொடர்பில்லாததால் வேலையில்லை.
வேலை சேருமே என்ற பதைப்பில் பொறுமையில்லை.
நைந்த மனதில் மதிய உணவும் செல்லவில்லை.
கொடுத்த ஆணையை மறந்து எகிறும் அதிகாரியை எதிர்க்கத் துணிவில்லை.
முடியாத இலக்கை நிர்ணயிக்கும்போது பொங்க முடியவில்லை.
அவசரப் பணி இருந்தும் ஐந்து நாள் விடுமுறை கேட்பவனை அறையவில்லை.
களைத்துச் சலித்து வீடு திரும்புகையில் உட்கார இடமில்லை.
மௌனமாய் உணவுண்டு கண்மூடித் துயில முயல்கையில் நித்திரை வரவில்லை.

மனது கேட்கிறது!
எத்தனை முறை இப்படி இருந்திருக்கிறேன்?
சுயநல உலகில்
பர்கின்ஸன்ஸால் நினைவழிந்து
கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
ஊசலாடிய உணர்விலும் கூட‌
கடந்து போகையில் கை பிடித்து
தவறாமல் என் வலியுணர்ந்து
ஏனடா? ஏதோ மாதிரி இருக்கிறாய்
என்று கேள்வியடுக்கிய என் அம்மாவுக்கு
சலிப்பாய் சொன்ன பதில் எல்லாம்
தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? தூங்கு என்பதுதான்.

பாவி மனது இப்போது பரிதவிக்கிறது
ஒன்றும் சொல்லாமல்
மூப்பும் நோவும்
மருந்தும்,அம்மாவுமாய்
கலவையான‌ வாசனையில்
அவள் மடி புதைந்து
மீண்டும் குழந்தையாக
வழியிருந்தபோது தொலைத்த நாட்கள்!

அம்மா இல்லை!
ஆறுதல் இல்லை
தொலைத்த வலியோ
தொலையவில்லை!

நன்றி :பாமரன் பக்கங்கள்

Comments

Popular posts from this blog

மண நாள் பரிசு

நீ